சியபத பினான்ஸ் பீ.எல்.சி நிறுவனத்தின் புதிய குழு சமூகப் பொறுப்பு நடவடிக்கைகளுக்கு இணங்க மற்றும் குழு சமூகப் பொறுப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், நாடு தழுவிய ரீதியில், பாடசாலைகள் மற்றும் பொலிஸ் நிலையங்களுக்கு உதவியை வழங்கி வருகிறது.
இதன் அடிப்படையில், சிலாபம், அம்பகந்தவிலயில் அமைந்துள்ள புனித றோகஸ் ஆரம்பப் பாடசாலை, மிகக் குறைந்த அடிப்படை வசதிகளுடன், சுமார் 700 மாணவர்கள் கல்வி கற்று வரும் ஒரு பாடசாலையாகக் காணப்படுகின்றது. அந்த வகையில், குறித்த பாடசாலையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துமுகமாக, உள்ளகத் தொலைத் தொடர்பு (PA) தொகுதி மற்றும் புத்தம் புதிய பாடசாலை பெயர்ப் பலகை என்பனவற்றை சியபத பினான்ஸ் நிறுவனம் அண்மையில் பெற்றுக் கொடுத்துள்ளது. இந்தப் புதிய உட்கட்டமைப்பு வசதிகள் மூலம் மாணவர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நடவடிக்கை தொடர்பில் கருத்து வெளியிட்ட சியபத பினான்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு ஆனந்த செனவிரத்ன, ‘நாட்டில் பரவி வரும் தொற்று நோய் தேசத்தின் எதிர்கால சந்ததியினரான மாணவ, மாணவியரைக் கடுமையான தாக்கத்திற்கு உட்படுத்தியுள்ளது. பல்வேறு பிரச்சினைகளையும் எதிர்நோக்கி வரும் இந்த மாணவ, மாணவியருக்கு ஒரு ஊக்குவிப்பைப் பெற்றுக்கொடுக்கும் வகையில், நாம் இந்த வேலைத் திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். இளம் உள்ளங்களுக்கு, மிகச் சிறந்த முதலீடுகள் தேவைப்படுகின்றன. அதற்கு அமைவாகவே, இந்தப் பாடசாலையின் உட்கட்;டமைப்பு வசதிகளை அதிகரிப்பதில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். அதன் மூலம் அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு அதிக ஊக்கத்தை ஏற்படுத்த நாம் எதிர்பார்க்கின்றோம்’ என்று கூறினார்.
சிலாபம் நகரில் நடத்தப்பட்ட இரண்டாவது குழு சமூகப் பொறுப்பு நடவடிக்கையாக, சிலாபம் பொலிஸ் நிலையத்திற்கு வீதிச் சமிக்ஞைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை அவதானிக்கையில், பொலிஸ் அதிகாரிகள் ஆற்றிவரும் சேவைகள் மூலம் நேரத்தைச் சேமிக்கவும், அதேவேளை, உயிர்களைப் பாதுகாக்கவும் அவர்கள் கடுமையான பிரயத்தனங்களில்
ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. எனவே, அவர்களுடன் இணைந்து, சியபத பினான்ஸ் நிறுவனம், வீதிப் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவும், அதன் மூலம் சிலாபம் பிரதேச மக்களுக்குத் தெளிவுப்படுத்தவும் செயற்பட உதவுகிறது. திரு. செனவிரத்ன மேலும் கூறுகையில், ‘பொது மக்களினதும், சமூகத்தினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் நாம் அதிக அக்கறை கொண்டுள்ளோம். அந்த வகையில், சிலாபத்தில் பொது மக்களின் பாதுகாப்புக்கருதியே, இந்த நன்கொடைகளைப் பெற்றுக்கொடுத்து, அபிவிருத்திகளுக்கு உதவி வழங்கி வருகின்றோம்’ என்றும் தெரிவித்தார்.
பொது மக்களின் நோக்கங்களையும், வாடிக்கையாளர் சேவையையும் எப்போதும் முன்னிலைப்படுத்தி செயற்பட்டு வரும் ஒரு நிறுவனம் என்ற வகையில், சியபத பினான்ஸ்,
தொடர்ந்து இவ்வாறான குழு சமூகப் பொறுப்பு நடவடிக்கைகளில் பெருமளவில் ஈடுபட்டு, சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக தொடர்ந்தும் உதவிகளை வழங்கும்.